தஞ்சைப் பெருவுடையார் கோயில்


தஞ்சைப் பெருவுடையார் கோயில்

திருவிசைப்பா பாடல் பெற்ற
தஞ்சைப் பிரகதீசுவரர் கோயில்

பெயர்
பெயர்: தஞ்சைப் பிரகதீசுவரர் கோயில்
அமைவிடம்
ஊர்: தஞ்சாவூர்
மாவட்டம்: தஞ்சாவூர்
மாநிலம்: தமிழ்நாடு
நாடு: இந்தியா
கோயில் தகவல்கள்
மூலவர்: பெருவுடையார் (பிரகதீசுவரர்)
தாயார்: பெரியநாயகி
தல விருட்சம்: வன்னி மரம்
தீர்த்தம்: சிவகங்கை
சிறப்பு திருவிழாக்கள்: மகா சிவராத்திரி
பாடல்
பாடல் வகை: திருவிசைப்பா
பாடியவர்கள்: கருவூரார்
கட்டிடக்கலையும் பண்பாடும்
கட்டடக்கலை வடிவமைப்பு: திராவிடக் கட்டிடக்கலை
வரலாறு
கட்டப்பட்ட நாள்: கிபி 11-ஆம் நூற்றாண்டு
அமைத்தவர்: (முதலாம் இராஜராஜ சோழன்)

தஞ்சைப் பிரகதீசுவரர் கோயில் என்றும் தஞ்சைப் பெரிய கோயில் அல்லது தஞ்சைப் பெருவுடையார் கோயில் என்றும் அறியப்படும் தலம் தஞ்சாவூரிலுள்ள சிவபெருமானுக்குரிய இந்து சமயக் கோயிலும் உலகப் பாரம்பரியச் சின்னமும் ஆகும். இந்தியாவில் அமைந்துள்ள மிகப்பெரிய கோவில்களில் இதுவும் ஒன்றாகும்.அத்துடன் இந்தியாவில் அமைந்துள்ள அற்புதமான கட்டிடக்கலை அம்சத்தைக்கொண்ட கோவில்களில் இதுவும் ஒன்றாகும்.

இக்கோயில் கட்டப்பட்டபோதிருந்த காலம், சோழராட்சியின் பொற்காலமாகும். தமிழ்நாடு முழுவதும் ஒரே குடைக்கீழ் இருந்ததுடன், எல்லைக்கப்பாலும் பல இடங்கள் சோழப் பேரரசின் கீழ் இருந்ததுடன், பெருமளவு வருவாயும் கிடைத்துவந்தது. பெருமளவு ஆள்பலமும், அரசனின் சிவபக்தியோடு கூடிய ஆளுமையும், இத்தகையதொரு பிரம்மாண்டமான கோயிலை சுமார் 7 ஆண்டுகளில் கட்டிமுடிப்பதற்குத் துணையாக இருந்தது.

இன்று தமிழகத்தின் மிக முக்கியமான சுற்றுலாத்தலமாக விளங்கும் இது 1987ம் ஆண்டு ஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல், பண்பாட்டு நிறுவனத்தால் உலக பாரம்பரிய சின்னமாக அறிவிக்கப்பட்டது.

1006ம் ஆண்டு கட்டத் தொடங்கி 1010ம் ஆண்டு கட்டி முடிக்கப்பட்ட இந்த கோயிலுக்கு 2010வது ஆண்டோடு 1000 வயது பூர்த்தியாகியது.

 
தஞ்சைப் பெருவுடையார் கோயில்
பிரகதீசுவரர் ஆலயம்
Big Temple-Temple.jpg
வகை கலாச்சாரம் சார்
பொறிப்பு வரலாறு
பொறிப்பு 1987 (11வது தொடர்)

தேவஸ்தான கோயில்

தஞ்சாவூர் அரண்மனை தேவஸ்தானத்திற்கு உட்பட்ட 88 கோயில்களில் இக்கோயிலும் ஒன்றாகும். 

சொல்லிலக்கணம்

தஞ்சைப் பெருவுடையார் கோயில் என்பதின் வடமொழியாக்கமே பிரகதீசுவரர் கோயில். இக்கோயில் தஞ்சை பெரிய கோயில்[6], பெரிய கோயில், இராஜராஜஸ்வர கோயில், இராஜராஜேஸ்வரம் என்றும் அழைக்கப்படுகிறது.

இக்கோயில், 10 ஆம் நூற்றாண்டில், சோழப் பேரரசு அதன் உச்ச நிலையிலிருந்தபோது, இராஜராஜ சோழ மன்னனால் (கி.பி.985-1014) கட்டப்பட்டது. ஆரம்பத்தில் இராஜராஜேஸ்வரம் என்றும், பின்னர், தஞ்சையை நாயக்கர்கள் ஆண்டகாலத்தில், தஞ்சைப் பெருவுடையார் கோயில் என்றும் அழைக்கப்பட்ட இக் கோயில், 17ஆம் மற்றும் 18ஆம் நூற்றாண்டுகளில் மராட்டிய மன்னர்களால் ஆளப்பட்டபோது பிருகதீசுவரம் ஆகியது.

வரலாறு

தஞ்சைப் பிரகதீசுவரர் கோயில் இராஜராஜன் என்று அழைக்கப்பட்ட சோழப் பேரரசரால் கட்டப்பட்டதாகும்.

இடைக்காலச் சோழர்கள்

கி.பி. 985 முதல் 1070 வரை சோழர் கலை உயர்வடைந்து உச்ச நிலையில் இருந்தது. இடைக்கால சோழர் காலத்தில் ஏராளமான கோயில்கள் கட்டப்பட்டன. பரந்து கிடந்த சோழப் பேரரசு எங்கும் கோயில்கள் கட்டும் பணி தொடர்ச்சியாக நடந்தது. இக்காலத்தில் எத்தனையோ சிறு கோயில்களும் கட்டப்பட்டன.

பெரிய கோவில் கட்டும் எண்ணத்தின் பின் புலம்

காஞ்சியில் ராஜசிம்மனால் கட்டப்பட்ட கயிலாயநாதர் கோயில் ராஜராஜனை மிகவும் கவர்ந்தது. அதே போல் ஒரு கோவிலை கட்ட எண்ணிய இராஜராஜன் தஞ்சையில் பெரிய கோவிலை கட்டினான். பெரியகோவிலின் அமைப்பு திருவாரூர் தியாகராஜர் கோவிலில் உள்ள அசலேஸ்வரர் சந்தியின் மாதிரியை கொண்டு உருவானதாகவும் செய்தி உண்டு. தஞ்சாவூர், திருக்காட்டுப்பள்ளி, இளங்காட்டில் இராசராசனால் கட்டப்பெற்ற செங்கல்லால் ஆன சிறிய கோயில்தான் முன் மாதிரியாகும்.

கோயில் அமைப்பு

தஞ்சைப் பெரிய கோயில், ஒரு தோற்றம்

சோழப் பேரரசின் விரிந்துவரும் பரப்பிற்கும் வளர்ந்து வரும் வசதிக்கும் ஓங்கிவரும் அதிகாரத்திற்கும் பொருத்தமாகக் கட்டடக் கலையில் தமிழருடைய சாதனையாக இந்தக் கோயிலை இராஜராஜன் கட்ட நினைத்தான் போலும். முக்கியமான கட்டடம் 150 அடி நீளம் இருக்கிறது. மிகப் பிரம்மாண்டமான விமானம் எகிப்தியப் பிரமிடுகளைப் போல கூர்நுனிக் கோபுரமாக அமைந்து கர்ப்பக்கிரகத்திலிருந்து 190 அடி உயரத்திற்கு ஓங்கி வளர்ந்திருக்கிறது. அக்காலத்தில் புவனேஸ்வரத்தில் கட்டப்பட்ட லிங்கராஜர் கோயிலின் உயரம் 160அடி. இராஜராஜேஸ்வரம் அதையும் மிஞ்சி விட்டமை குறிப்பிடத்தக்கது. இந்தக் கோயிலில் பிற்காலத்தில் கட்டப்பட்டவை – முன் தாழ்வாரம், நந்தி மண்டபம், கருவூர்த் தேவர் கோயில், அம்மன் கோயில், சுப்பிரமணியர் கோயில் ஆகியன.

இவை தவிர இந்த மாபெரும் கோயிலின் ஏனைய பகுதிகள் யாவும் ஒரே காலத்தவை. இவற்றினுடைய பெருமிதத் தோற்றத்தையும் ஒருங்கிணைந்த திட்டத்தின் எளிமையான இயல்பையும் பாராட்டாமல் இருக்கமுடியாது. துணைச் சார்ந்த(Axial) மண்டபங்களும் விமானமும் அர்த்த மண்டபமும் மகாமண்டபமும் பெரிய நந்தியும் அவற்றிற்கேற்ற பொருத்தமான அளவுகளையுடைய ஒரு சுற்றுச் சுவருக்குள் அடங்கியிருக்கின்றன. இச்சுவரில் கிழக்கே ஒரு கோபுரம் இருக்கிறது. மதிலை ஒட்டி உள்பக்கமாக பல தூண்களுள்ள ஒரு நீண்ட மண்டபம் செல்லுகிறது. இது 35 உட்கோயில்களை இணைக்கிறது. நான்கு திக்குகளிலும் பல இடைவெளிகளுக்கு நடுவே கேந்திரமான இடங்களில் இந்த உட்கோயில்கள் கட்டப் பெற்றிருக்கின்றன. இரண்டாவது வெளிப் பிரகாரத்தின் வாயிலாக இருந்த இடத்தில் முன் பக்கத்தில் இரண்டாவது கோபுரம் இருக்கிறது.

முக்கிய விமானம் உத்தம வகையைச் சார்ந்தது; ஆதலால் இது மிகச் சிறந்தது. இதை, தமிழில் மாடக்கோயில் என்றும் சொல்வார்கள். இவ்வகைக்கு முதலாவது உதாரணம் தட்சிணமேரு-கோரங்கநாதர். இது பக்கவாட்டில் 99 அடி உள்ள சதுர அடித்தளத்தில் மீது அமைந்தது. படுக்கையான பகுதி, நீண்டு துருத்திக் கொண்டிருக்கும். ஐந்து பகுதிகளாக பிரிக்கப்பட்டிருக்கிறது. நடுவேயுள்ள பகுதி மற்ற பகுதிகளை விடப் பெரியது. தரை மட்டத்துக்குக் கீழே இருக்கும் தளத்திலிருந்து சிகரம் வரை குடாவும் மாடமும் மாறி மாறிக் காணப்படுகின்றன. சுவரில் பதித்த தூண்கள், பீடத்தை அழகுபடுத்துகின்றன. யாளி உருவத்தால் அழுத்தப்பட்ட கபோதம் உடைய பீடத்தின் மீது, இதைவிடச் சிறிய பரப்பில் 63அடி சதுரத்தில் ஒரு உபபீடம் எழுப்பப்பட்டிருக்கிறது.

மேலேயும் கீழேயும் பத்ம தளங்கள் உடையதும் அரை வட்ட வடிவத்தில் பிரம்மாண்டமானதாய் அமைந்ததுமான குமுதத்தை ஏற்றுக்கொள்ள பத்ம தளமாக, கல்வெட்டுக்களுடன் கூடிய உபானம் விளங்குகிறது. குமுதம், கிழக்கு மூலையில் குறுக்காகத் திரும்பும் போது, விளிம்பில் எண்கோணமாக வெட்டப்படுகிறது. கண்டமும் கபோதமும் நெருங்கிக் காட்டப்பட்டுள்ளன. குமுதத்திற்கு நேர் உயரத்தில் வரி விமானம் கானப்படுகிறது. வரிசையாகப் பல சிங்கங்கள், அவறின் மீது சிங்கங்களை ஓட்டுபவர் மூலைகளில் சிங்களுக்குப் பதிலாக, மகரங்களும் போர் வீரர்களும் வாயைப் பிளந்து கொண்டிருக்கும் குதிரைகளும் அவற்றின் மீதேறிச் சவாரி செய்பவர்களின் உருவங்களும் உள்ளன. உள்ளுறையின் செங்குத்தான சுவர்கள் தள அமைப்பைப் பின்பற்றிய 50அடி உயரத்துக்கு எழுப்பப்பட்டுள்ள, பிரம்மாண்டமான வளைந்த பிதுக்கம் அந்தச் சுவர்களை இரண்டு மாடிகளாகப் பிரிக்கிறது.

இக்கோயிலின் கட்டிடக்கலைசோழர் கலைக்கு நல்லதொரு எடுத்துக்காட்டாகக் கருதப்படுகிறது.

இடைச்சிக் கல்

பெரியகோவில் எனப்படும் தஞ்சை பிரகதீஸ்வரர் கோவில் கட்டுமான பணி நடந்து கொண்டிருந்தது. அழகி என்னும் இடையர் குல மூதாட்டி சிவத்தொண்டு செய்ய விரும்பினார். ஏழை மூதாட்டி தன்னால் இயன்ற தொண்டாக கோவில் கட்டி முடிக்கும் வரை கோவில் கட்டும் சிற்பிகளின் தாகத்தை போக்கும் பொருட்டு தினமும் அவர்களுக்கு தயிர்,மோர் வழங்கி வந்தார்.

இதனை அறிந்த மன்னர் அருள்மொழிவர்மன் (ராஜராஜசோழன்) இடையர் குல மூதாட்டியின் சிவத்தொண்டை அனைவரும் அறியும் வண்ணம் 80டன் எடை கொண்ட கல்லில் அழகி என்று பெயர் பொறித்து, அதனை ராஜகோபுரத்தின் உச்சியில் இடம் பெற செய்தார். அந்த கல் இடைச்சிக் கல் என்று அழைக்கப்படுகிறது. அந்த கல்லின் நிழலே இறைவன் பிரகதீஸ்வரர் மேல் விழுகிறது.

வடிவமைப்பு

எகிப்திய பிரமிடுகளின் கட்டுமான முறைக்கும் தஞ்சை மற்றும் கங்கைகொண்ட சோழபுர கோவில்களின் கட்டுமான முறைக்கும் ஒற்றுமை இருப்பதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர். இரண்டிலுமே தேர்ந்தெடுக்கப்பட்ட கற்கள் அடுக்கியும் கோர்த்தும் வைத்து கட்டப்பட்டுள்ளது. இரண்டிலுமே கோள்களின் கதிர்வீச்சுக்கள் அதன் மையப்ப் பகுதியில் குவியுமாறு வடிவமைக்கப்படுள்ளது. புவி அதிர்வுகளினால் பாதிப்புகள் ஏற்படுவதில்லை. கதிர்வீச்சுக்களின் குவியலில் பாதுகாக்கப்பட்ட அரசர்களின் உடல் கெடுவதில்லை. அதுபோல, சோழ கோவில்களில் நிலை நிறுத்தப்பட்டுள்ள ஆவுடை-லிங்கங்கள் தொடர்ந்து சக்தியுள்ள மையமாக புகழுடைய கோவில்களாக சிறந்து விளங்குகின்றன.

நந்தி மண்டபம்

தஞ்சைப் பெரியகோவிலில் உள்ள பெரிய நந்தி ஒரே கல்லால் செய்யப்பட்டது. இதன் உயரம் 14 மீ, நீளம் 7 மீ, அகலம் 3 மீ ஆகும். நந்தி மண்டபம் நாயக்கர் காலத்தில் கட்டப்பட்டதாகக் கூறப்படுகிறது.

நந்திமண்டபத்திற்கு தெற்கே உள்ள திருச்சுற்று மாளிகையில் வடதிசையை நோக்கியபடி உள்ள நந்தியே இராஜராஜனால் பெருவுடையாருக்கு எதிரே அமைக்கப்பட்டதாகும். பின்னாளில் நாயக்கர்கள் சிவலிங்கத்துக்கு இணையான பெரிய நந்தியை நிறுவினர். முதலில் அமைக்கப்பட்ட நந்தி கேரளாந்தகன், இராஜராஜன் வாயில்களுக்கு இடைப்பட்ட பகுதிக்கும் பின்னர் திருச்சுற்று மாளிகைக்கும் மாற்றப்பட்டது.

சந்நிதிகள்

சிவலிங்கம் பிரதிட்டை செய்யப்பட்டுள்ள, முக்கியமான கோயிலையும், அதனோடு கூடிய மண்டபங்களையும் தவிர, சண்டிகேஸ்வரர், அம்மன், சுப்பிரமணியர், கணபதி மற்றும் கருவூர்த் தேவர் கோயில்களும், இவ் வளாகத்துள் அமைந்துள்ளன.

  • பெருவுடையார் சந்நிதி – பிரகதீசுவரர், பெருவுடையார் என்று அழைக்கப்படும் மூலவர் சிவபெருமான் லிங்க வடிவில் உள்ளார். இந்த மூலவரை இராஜராஜ சோழன் ராஜராஜீஸ்வரமுடையார் என்ற பெயரில் வழிபட்டுள்ளார். இம்மூவருக்கு பீடம் இல்லை.
  • பெரியநாயகி அம்மன் சந்நிதி – இக்கோவிலின் அம்மன் பெரியநாயகியாவார்.
  • கருவூர் சித்தர் சந்நிதி – இக்கோவிலில் கருவூர் சித்தருக்கென தனி சந்நிதி அமைந்துள்ளது.
  • நவகிரக இலிங்க சந்நிதி – இக்கோயிலில் சிவபெருமானே நவகிரகமாக இருக்கிறார். அதனால் நவகிரங்களின் உருவச் சிலைகளுக்குப் பதிலாக நவ லிங்கங்களே அமைந்துள்ளன.
  • வராகி அம்மன் சந்நிதி –

கல்வெட்டுக்கள்

இக் கோயிலின் பலவிடங்களிலும் இருக்கும் கல்வெட்டுக்கள், இக் கோயிலில் இராஜராஜன் கொண்டிருந்த தனிப்பட்ட கரிசனத்தை விளக்குவதாகக் கூறப்படுகிறது. தான் மட்டுமன்றி, அரச குடும்பத்தினரும், அரச அலுவலரும், படையினரும், பொதுமக்களும் ஆகிய எல்லோருடைய பங்களிப்பும், கோயிலின் பராமரிப்பிலும், பாதுகாப்பிலும் இருக்கும்படி பார்த்துக்கொண்டானெனவும் தெரிகிறது. நிதித்தேவைகளும், அரசனால் இறையிலியாகக் கொடுக்கப்பட்ட நிலங்களிலும், கிராமங்களிலிருந்தும் வரும் வருவாயினாலும், இன்னும் வேறு வழிகளிலும் பெற்றுக்கொள்ளப்பட்டது.

கோயிலில் அன்றாட கருமங்களை ஒழுங்காகச் செயல்படுத்துவதற்குப், பூசகர்களும்சிற்பிகளும் தேவார ஓதுவார்களும், இசைவாணர்களும், நடனமாதர்களும், மேலும் இன்னோரன்ன பணியாட்களும் தேவைகளுக்கேற்ப நியமிக்கப்பட்டிருந்ததாகத் தெரிகிறது. 50 ஓதுவார்களும், 400 நடன மாதர்களும் கோயிலிலிருந்ததாகக் கல்வெட்டுச் சான்றுகள் பகர்கின்றன.

விழாக்கள்

தஞ்சைக் கோயிலின் தோற்றம்

  • பிரம்மோற்ஸவம் –
  • ராஜராஜசோழன் பிறந்தநாள் விழா
  • அன்னாபிஷேகம்
  • திருவாதிரை
  • ஆடிப்பூரம்
  • கார்த்திகை
  • பிரதோசம்
  • சிவராத்திரி
  • தேரோட்டம்

தஞ்சைப் பெரிய கோயிலின் சிறப்பு

  • இக்கோவில் விமானத்தின் உயரம் 216அடி (66மீ) உயரம் கொண்டது.
  • இரண்டு அல்லது மூன்று தளங்களை மட்டுமே கொண்டு கோயில்கள் கட்டப்பட்டு வந்த காலத்தில், கற்களே கிடைக்காத காவிரி சமவெளிப் பகுதியில், 15 தளங்கள் கொண்ட சுமார் 60 மீ உயரமான ஒரு கற்கோயிலை ராஜராஜன் எழுப்பினார்.
  • இத்தகையதொரு பிரம்மாண்டமான கோயில் சுமார் 7 ஆண்டுகளில் கட்டி முடிக்கப்பட்டது
  • கருவறையில் உள்ள சிவலிங்கம் உலகிலேயே பெரிய சிவலிங்கமாகும். 6 அடி உயரம், 54 அடி சுற்றளவு கொண்ட ஆவுடையார், 23 அரை அடி உயரம் கொண்ட லிங்கம் ஆகியன தனித்தனியாக கருங்கற்களால் செதுக்கப்பட்டு இணைக்கப்பட்டுள்ளது.
  • இக்கோவிலின் நுழைவாயிலில் அமைக்கப்பட்டுள்ள பிரமாண்டமான நந்தி சிலையின் உயரமும், அகலமும் முறையே: 13 அடிகள் மற்றும் 16 அடிகள் ஆகும்.
  • தமிழகத்தில் சற்றொப்ப இதே அமைப்பிலுள்ள கோயில்கள் கங்கைகொண்ட சோழபுரம் பிரகதீசுவரர் கோயில், தாராசுரம் ஐராவதேஸ்வரர் கோயில், திருபுவனம் கம்பஹரேஸ்வரர் கோயில் ஆகியவையாகும்.
  • 1010ம் ஆண்டு முடிக்கப்பட்ட இந்த கோயிலுக்கு 2010வது ஆண்டோடு 1000 வது பிறந்தநாள் கொண்டாடப்பட்டது.

ஆயிரம் ரூபாய் நோட்டு, தபால் தலை

தஞ்சைக் கோயிலின் தோற்றம் பதிக்கப்பட்ட ரூபாய் நோட்டு

தஞ்சை பெரிய கோவிலுக்கு பெருமை சேர்க்கும் வகையில் மத்திய அரசு சார்பாக கடந்த 1954ம் ஆண்டு ஏப்ரல் 1ஆம் தேதி Indian Rupee symbol.svg 1000 நோட்டை வெளியிட்டது. அதில் தஞ்சை பெரிய கோவில் எனப்படும் பிரகதீசுவரர் ஆலயத்தின் வியத்தகு தோற்றம் பதிக்கப்பட்டது. ரிசர்வ் வங்கியின் 4வது கவர்னரான சர் பெனகல் ராமாராவ், அதில் கையெழுத்திட்டார்.

டெல்லி, மும்பை, கொல்கத்தா, சென்னை மற்றும் கான்பூர் ஆகிய நகரங்களில் அந்த ஆயிரம் ரூபாய் நோட்டுகள் அச்சிடப்பட்டன. 5 வரிசைகளிலான எண்களில் அந்த நோட்டுகள் வெளியாகின. மும்பையில் அச்சிடப்பட்ட நோட்டுகளின் வரிசை ஆங்கில எழுத்து ஏ ஆகும்.

மத்திய அரசு 1995ம் ஆண்டில் மாமன்னர் ராஜராஜ சோழன் உருவம் பதித்த 2 ரூபாய் தபால் தலையை வெளியிட்டது.

ஆயிரமாண்டு நிறைவு விழா

சதயத்திருவிழாத் தோற்றம்

தஞ்சை பெரிய கோவிலின் ஆயிரம் ஆண்டு நிறைவு விழாவினை தஞ்சை மாநகரில் 2010 செப்டம்பர் 25, செப்டம்பர் 26-ந் தேதி ஆகிய 2 நாட்களுக்கு சிறப்புற நடத்தப்பட்டது.

மத்திய மந்திரி ஆ. ராசா பெரியகோவில் உருவம் பொறித்த 5 ரூபாய் சிறப்பு தபால் தலையை முதல்-அமைச்சர் மு. கருணாநிதி முன்னிலையில் வெளியிட்டார். அதை மத்திய மந்திரி ஜி.கே.வாசன் பெற்றுக்கொண்டார்.

சிறப்பு தபால் தலையின் மாதிரி வடிவத்தை, முதல்-அமைச்சர் கருணாநிதி திறந்து வைத்தார். பின்னர் மத்திய மந்திரி எஸ்.எஸ்.பழனிமாணிக்கம் பெரிய கோவில் மற்றும் ராஜராஜன் உருவம் பொறித்த 5 ரூபாய் நாணயத்தை வெளியிட, அதை மத்திய மந்திரி நாராயணசாமி பெற்றுக்கொண்டார்.

விழாவின் முதல் நாள் காலை முதல் நாட்டுப்புறக் கலைஞர்களின் பல்வேறு தெருவோர நிகழ்ச்சிகள் நகரின் பல பகுதிகளில் நடத்தப்பட்டது. மாலையில் தஞ்சை பெரிய கோவிலில் அனைத்திந்திய பரதநாட்டிய கலைஞர்கள் சங்கத்தின் சார்பில் பத்மா சுப்ரமணியத்தின் தலைமையில் ஆயிரம் நடனக்கலைஞர்கள் கலந்து கொண்ட மாபெரும் நிகழ்ச்சி இடம்பெற்றது. அந்த நடன நிகழ்ச்சிக்கு முன்பாக நாதஸ்வர இசை நிகழ்ச்சியும், நடன நிகழ்ச்சிக்குப் பின்னர் 100 ஓதுவார்களின் திருமுறை இசை நிகழ்ச்சியும் நடத்தப்பட்டது.

இரண்டாம் நாள் காலையில் தஞ்சை தமிழ்ப்பல்கலைக்கழகத்தில் ஆய்வரங்கமும், தஞ்சை பெரிய கோவிலில் பொது அரங்கமும், மாலையில் தஞ்சை திலகர் திடலில் முதல்வர் கருணாநிதி தலைமையில் தஞ்சை பெரிய கோவில் ஆயிரம் ஆண்டு நிறைவு நினைவு நாணயம் மற்றும் அஞ்சல் தலை வெளியிடுதல், தஞ்சை மாநகருக்கான அடிப்படை கட்டமைப்பு வசதிகளை தொடங்குதல் ஆகிய நிகழ்வுகள் இடம்பெற்றன. வரலாற்று கண்காட்சி ஒன்றும் நடத்தப்பட்டது.

 

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s